×

உடற்பயிற்சி என்பது தவம்!

நன்றி குங்குமம் தோழி

பவர் லிஃப்டர் ப்ரீத்தா ஜெகதீஷ்

‘‘குடும்பம் பெண்களுக்கு முக்கியமான விஷயம்தான். ஆனால் குடும்பம் மட்டுமே உலகம் கிடையாது. ஒரு வட்டத்திற்குள் பெண்கள் முடங்காமல், உடைத்து வெளியில் வரவேண்டும். சலனத்தை ஏற்படுத்தாமல் சாதிக்க முடியாது’’ எனப் பேச ஆரம்பித்தவர் சென்னை அம்பத்தூரில் பெண்களுக்கான பிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வரும் பவர் லிஃப்டர் ப்ரீத்தா ஜெகதீஷ்.

‘‘ஏரோபிக் ப்ரீத்தா எனக் கேட்டால் அம்பத்தூரில் என்னை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது’’ எனப் புன்னகைத்தவர், ‘‘என்னோட பிட்னஸ் ஸ்டுடியோ பெயர் Come On Girls.

சுருக்கமா COG. இது எக்ஸ்க்ளூசிவ் ஃபார் லேடீஸ்’’ என்கிறார் விரல் உயர்த்தி. ‘‘பள்ளியில் படிக்கும்போதே ஸ்கூல் டீச்சராக வேண்டும் என்பதில் தொடங்கியது ஆர்வம். ஆனால் அது நடக்காமலே போனது. அதனாலென்ன?இதோ பிட்னஸ் ஸ்டுடியோவை சொந்தமாகத் தொடங்கி பயிற்றுவிப்பாளராய் மாறிட்டேன். இதுவும் ஆசிரியர் தொழில்தானே…’’ ப்ரீத்தாவிடம் மீண்டும் வெளிப்படுகிறது அதே புன்னகை.

‘‘எனது இரண்டாவது குழந்தை பேற்றுக்குப் பிறகு, என் 22 வயதில் உடல் ஓவராக வெயிட் போட ஒபிசிட்டி ஆனமாதிரி ஃபீல் இருந்தது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில், அடையாரில் உள்ள ஒரு பிட்னஸ் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து ஏரோபிக்ஸ், ஜும்பா மற்றும் குரூப் பிட்னஸ் பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன். அதிகாலை 4 மணிக்கே எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தி அனுப்பி, கணவருக்கு வேண்டியதை செய்து கொடுத்து, அம்பத்தூரில் இருந்து அடையாருக்கு தினமும் பயணிப்பேன்.

பயிற்சியில் இறங்க இறங்க ஆர்வம் அதிகமாகி, ஏரோபிக்ஸ், ஜும்பா இரண்டையுமே சான்றிதழ் படிப்பாக எடுத்து முடித்தேன். முடித்ததுமே, பல்வேறு பிட்னஸ் நிறுவனங்களில் இருந்து டிரெயினர் பணிக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அண்ணா நகரில் இருந்த “வுமன்ஸ் வேர்ல்டு” பிட்னஸ் ஸ்டுடியோவில் இணைந்து, பெண்களுக்கு பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தேன். பர்சனல் டிரெயினர் என்கிற ஒரு விஷயமும் ஜிம்மில் இருந்தது. இதற்கு உபரி வருமானமும் (incentive) கிடைத்தது. அங்குதான் ஒரு விஷயத்தையே உணர ஆரம்பித்தேன். பிட்னஸ் பயிற்சிகளுக்கு செல்வதற்கு வருடத்திற்கு 10 ஆயிரம் செலவு செய்ய பெண்கள் ரொம்பவே யோசிப்போம். ஆனால் ஆண்கள் 15 ஆயிரம் என்றாலும் ஜிம்மிற்கு அசால்டாக செலவு செய்தார்கள். காரணம், ஆண்கள் சம்பாதிப்பவர்களாக இருப்பதால்.

அதிகாலை 5 மணிக்கு அபார்ட்மென்டில் வசிக்கும் பெண்களுக்கு வாரத்தில் 3 நாள் குரூப் ஏரோபிக்ஸ் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்து, அப்படியே தனியார் பள்ளி மாணவர்களுக்கு, மாலைநேர ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி உடற்பயிற்சி வகுப்புகளையும் எடுத்தேன். குடும்பம், அபார்ட்மென்ட் பெண்களுக்கு பயிற்சி, பிட்னஸ் ஸ்டுடியோ வேலை, மாலையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியென மாறி மாறி பயணித்தே பொருளாதாரத்தை தேடினேன். காரணம், தனிப்பட்ட நமது தேவைகளுக்கு, கணவராக இருந்தாலும், அவர் முன்பு பணத்திற்கு நிற்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்’’ என்கிறார் ப்ரீத்தா வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலுடன்.

‘‘இந்த நிலையில்தான் நான் வசிக்கும் அம்பத்தூரிலேயே பிட்னஸ் சென்டர் ஒன்றைத் தொடங்கினார்கள். எனது வேலையை அம்பத்தூருக்கு மாற்றிக் கொண்டேன். பிட்னஸ் தேடிவரும் பெரும்பாலான பெண்களின் கேள்வி, பெண்கள் பயிற்சிக்கு வருவதற்கு தனி நேரம் இருக்கிறதா? பெண் பயிற்சியாளர்கள் பயிற்சி தருவதற்கு இருக்கிறார்களா? என்பதாகவே இருந்தது. இந்த ஸ்பார்க்கில் தோன்றியதே “கமான் கேர்ள்ஸ்” என்கிற என்னுடைய பிட்னஸ் ஸ்டுடியோ.

‘‘2016ல் என் வீட்டின் மேல் பகுதியை ஜிம்மாக மாற்றி பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கி, சமீபத்தில்தான் அம்பத்தூர் மெயினில் தனியாக ஸ்டுடியோ செட்டப்பை உருவாக்கினேன். இங்கு ட்ரெட்மில், இ.எஃப்.எக்ஸ், சைக்கிளிங் பைக், லெக் ப்ரெஷ் மெஷின், நீ ஸ்ட்ரெங்தனிங், ஷோல்டர் மெஷின், மங்கி பார் வொர்க்அவுட், ஸ்குவாட், பெஞ்ச் ப்ரெஷ் செட்டப், தம்பல்ஸ், ராடு, ஸ்டிக் என பிட்னஸ் செய்வதற்கான எல்லாமும் உண்டு. பிஸிஓடி, ஓவரி சின்ட்ரம், ஹார்மோன் இன்பாலன்ஸ் பிரச்னை உள்ள பெண்களும் என்னிடம் வருகிறார்கள். பிட்னஸ் என்பதைத் தாண்டி, பவர் லிஃப்டிங் பயிற்சியும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

“நீ குண்டாக இருக்க.. நீ எப்படி என் உடல் எடையை குறைப்பாய்?” என்பதே பலரின் கேள்வியாக என்னிடம் இருந்தது. நான் ஃபிட் என்பதை எல்லோரிடத்திலும் என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. கூடவே எனது எடையை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்க, என் கண்களில் எதிர்பாராமல் ஒரு காட்சி தென்பட்டது.

35 வயது மதிக்கத்தக்க வடநாட்டுப் பெண் ஒருவர் மாரத்தானில் பங்கேற்று எங்களுடன் இணைந்து ஓடுகிறார். அவரது இரண்டு கால்களிலும் தொடையிடுக்கின் வழியே ரத்தம் வடிந்துகொண்டே இருந்தது. அவருக்கு மாதவிடாய் நேரம்போல. அனைவரின் பார்வையும் அவர் மீதே இருக்க, பெரிதாக அவர் கண்டுகொள்ளாமலே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார். இது எவ்வளவு பெரிய விஷயம். பெண்களுக்கு மாதவிடாய் தடையே கிடையாது என்கிற விஷயத்தை அன்று அந்தப் பெண் எனக்குள் உடைத்தார்.

பெண்ணுக்குள் இருக்கிற இயல்பான ஒன்றுக்காக, பெண்கள் ஏன் தயங்க வேண்டும்..? தடைபட வேண்டும்..? வெட்கப்பட்டு விலக வேண்டும்..? நிகழ்ச்சி இறுதியில் அவரை மேடையேற்றி எல்லோர் முன்பும் பேசவைத்தார்கள். அப்போதும் அதே நிலையில் நின்றே அனைவர் முன்பும் பேசினார். அந்தப் பெண் என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை நான் மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான், இன்டர்நேஷனல் பவர் லிஃப்டரான மிஸ்டர் வால்டர் அருண் குமார் என்னிடம், ‘உங்களுக்கு பிஸிக்ஸ் சிறப்பாக இருக்கு. பவர் லிஃப்டிங் பண்றீங்களா?’ எனக் கேட்டு என் ஆர்வத்தை தூண்டினார். ‘பவர் லிஃப்டிங் செய்வதற்கான பயிற்சியை நானே உங்களுக்கு வழங்குகிறேன். காம்பெடிஷனை மீட் பண்ணுங்க’ எனவும் ஊக்கப்படுத்தினார்.

முதல் போட்டியில் பங்கேற்கும்வரை, என் குடும்பத்திற்கு தெரியாமலே பயிற்சி மேற்கொண்டேன். காரணம், பெண்களால் இதைச் செய்யவே முடியாது. சிசேரியன் ஆன உடம்பு. பெண்கள் வெயிட் தூக்கக் கூடாது. கர்ப்பப்பை இறங்கிடும். பேக் பெயின் வரும். பீரியட்ஸ் பிரச்னைகள் ஏற்படும் என தடைபோடுவார்கள் என நினைத்தே தவிர்த்தேன். பவர் லிஃப்டிங்கில் பெஞ்ச் ப்ரெஷ், டெட் லிஃப்டு, ஸ்குவாட் என மூன்று நிலை உண்டு. மூன்றும் சேர்ந்ததே பவர் லிஃப்டிங். என் முதல் ஸ்டேட் லெவல் காம்பெடிஷன் நேரு உள்விளையாட்டு அரங்கில். அதில் எனக்கு 2வது இடம். சில்வர் மெடலும்.. கப்புமாக மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன். அதன்பிறகே குடும்பத்தினரின் ஊக்கமும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது.

அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி என்னை நகர்த்தியதில், மாவட்ட அளவில் 16 போட்டிகளிலும், மாநில அளவில் 12 போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தையும், இரண்டாம் இடத்தையும் மாறிமாறி பெற்றிருக்கிறேன். 6 முறை ஸ்டேட் செய்தால் ஒரு நேஷனல் பங்கேற்கலாம். 2 நேஷனல் செய்தால் ஒரு ஏசியா அல்லது இன்டர் நேஷனல் போட்டியில் பங்கேற்கலாம். எனக்கு நேஷனலிலும் கோல்ட் கிடைத்தது. ஏசியா அளவில் நடந்த போட்டியிலும் பங்கேற்று அதிலும் தங்கம் வாங்கியாச்சு.

சமீபத்தில் 137.5 கிலோ வெயிட்டை தூக்கியிருக்கிறேன். 150 கிலோ வெயிட்டை தூக்கும் முயற்சியில் இருக்கிறேன். இன்டர்நேஷனல் விளையாட்டில் பங்கேற்கும் எண்ணமும் இருக்கிறது’’ என நம்மை தொடர்ந்து பிரமிப்பிற்குள் கொண்டு செல்கிறார் ப்ரீத்தா.‘‘அதிகாலை 4 மணிக்குமேல் நான் தூங்கியதில்லை. அதேபோல் என் குடும்பத்திற்கான கடமையை செய்யவும் தவறியதில்லை‘‘ என்கிற ப்ரீத்தா, ‘‘Reshape your mind என்பதே அடிக்கடி நான் சொல்லும் வார்த்தை. என்னோடு ஸிங் ஆகுகிறவர்கள் என்னைத் தேடி வருகிறார்கள்.

ஒரே மைன்ட்செட் உள்ளவர்களால் மட்டுமே ஜிம் என்றால் என்ன? வொர்க்அவுட் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உடல் பயிற்சி என்பது முழுக்க முழுக்க தவம். உணவுக் கட்டுப்பாட்டில் தொடங்கி, பயிற்சி வரை உடலை வருத்தித்தான் செய்ய வேண்டும். இதில் நேரம் தவறாமை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு என எல்லாமும் இருக்கிறது. ஒரு விஷயத்தை அடைய நிறைய விஷயங்களை இழந்துதானே ஆகவேண்டும்…’’ அழுத்தமாகவே பதிவு செய்து விடைபெற்றார் பவர் லிஃப்டர் ப்ரீத்தா ஜெகதீஷ்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post உடற்பயிற்சி என்பது தவம்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Preetha Jagadish ,
× RELATED டூர் கிளம்புறீங்களா?